வட்டியினால் சந்திக்க நேரிடும் ஆபத்துகள் خطر الربا

  • Version
  • Download 0
  • File Size 4.02 MB
  • File Count 1
  • Create Date ஆவணி 6, 2026
  • Last Updated ஆவணி 6, 2026

வட்டியினால் சந்திக்க நேரிடும் ஆபத்துகள் خطر الربا

நம்பிக்கை கொண்டோரே! அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டியாகவும் இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணாதீர்கள், இன்னும் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், (இதனைத் தவிர்த்துக்கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள் 3:130

அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்

அறிமுகம்

ஒரு முஸ்லிம் பன்றி இறைச்சியை ஒருபோதும் உண்ண மாட்டார், ஏனெனில் அது ஹராம் (சட்டவிரோதமானது); அவரது தாய் அல்லது சகோதரியை ஒருபோதும் திருமணம் செய்ய மாட்டார், ஏனெனில் அதுவும் ஹராம், ஆனால் அதே நபருக்கு வட்டியை விழுங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை? வட்டியில் ஈடுபடுவது உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு பெரிய பாவம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எவர்கள் (வட்டியை எடுப்பதன்பால்) திரும்பி விடுகிறார்களோ! அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள். 2:275

வட்டி இப்படி ஒரு தண்டனைக்குரிய பாவமாக இருக்க, அதிகமான முஸ்லிம்கள் ஈடுபடுவது ஏன், இதனை லேசாக ஏடுத்துக்கொள்வது ஏன்?

வட்டியின் பொருள்

ரிபா (வட்டி) எனும் அரபி பெயர்ச் சொல் “ரபா” என்ற வினைச்சொல்லிருந்து உருவானது. இதன் பொருள் "வளர்த்தல்", அதிகப்படுத்தல். இதில் வங்கிகள் கொடுக்கும் வட்டி, தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் அனைத்தும் வட்டியில் அடங்கும்.

வட்டி ஹராம் என்பதற்கான ஆதாரங்கள்

வட்டி ஹராம், இஸ்லாத்தின் மிகக் கடுமையான பாவங்களில் ஒன்று என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன!

அல்லாஹ்வையும், குர்ஆனையும் உண்மையாக நம்பிக்கை கொண்டவருக்கு, வட்டியை தடை செய்யும் இந்த தெளிவான வசனம் போதுமானது:

மேலும், அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து அவன் வட்டியை (ஹராமாக்கி)த் தடுத்துவிட்டான். 2:275

அல்குர்ஆனில், வட்டியில் சம்பந்தப்பட்டவரைத் தவிர வேறு யாருடனும் அல்லாஹ் போர் அறிவிக்கவில்லை:

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், மேலும், நீங்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால், அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். 2:278-279

அல்லாஹ் வட்டியை தெளிவாக ஹராம் ஆக்கிய பின் உங்களுடன் போர் புரிவதை நீங்கள் ஆசை படுகிறீர்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - நரகத்தில் தள்ளக்கூடிய ஏழு பாவங்களில் ஒன்று வட்டியாகும். (புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியது போல் வட்டி அனைத்து கோணங்களிலும் ஹராம் ஆகும்.

வட்டி வாங்குபவனையும், அதைக் கொடுப்பவனையும், அதற்கு சாட்சி சொல்பவனையும், அதற்கு கணக்கு எழுதுபவனையும் அல்லாஹ் சபித்துவிட்டான்.

அல்லாஹ் சபித்தவர்களில் ஒருவராக ஆகிவிடாதீர்கள்

வட்டி ஏன் ஹராம்?

வட்டி ஹராம் என்பதற்கான காரணங்களில் முதன்மையானது. அது அல்லாஹ்வின் கட்டளை என்பதாகும். அல்லாஹ் தன் ஞானத்தின் அடிப்படையில், ஒரு செயலை கடமையாகவும் மற்றொன்றை தடுக்கவும் செய்கிறான், மனிதர்களுக்கு இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் சிறந்ததற்கேற்ப, அவனது கட்டளைகளை மக்களுக்கு வழங்கியுள்ளான். மேலும் அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக உள்ளான்.

இஸ்லாமிய மார்க்க மேதைகள் வட்டி ஏன் ஹராம், என்பதற்கான கீழ் காணும் சில கூற்றுகளை முன்வைத்துள்ளனர்.

சில பெரிய நாடுகள் மற்றும் சிறிய நாடுகள் வட்டி கடனினால் வறுமையில் அவதிப்படுகிறது. அவற்றில் விதிக்கப்படும் அதிக வட்டிக் கட்டணம் (ரிபா) அந்த நாட்டின் மக்கள் மீது மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. வட்டி என்பது மனிதர்களின் வாழ்க்கையை அழிக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 11மில்லியன் குழந்தைகள் வறுமை மற்றும் கடன் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் உயிரிழக்கின்றன. நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாசஞ்சோ நைஜீரியாவின் கடன் சுமையைப் பற்றிக் குறிப்பிடுகையில்…

"1985 அல்லது 1986 வரை நாம் கடனாக வாங்கியது சுமார் 5 பில்லியன் டாலர் தான் இருந்தது. ஆனால் இதுவரை 16 பில்லியன் டாலர் திருப்பி செலுத்தியுள்ளோம். இருந்தும், இன்னும் 28 பில்லியன் டாலர் நமக்கு கடனாகவே! இருக்கிறது என்று கூறப்படுகின்றது. அந்த 28 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனாளர்களின் (கடன் வழங்கியவர்களின்) அநீதியான வட்டி விகிதங்களால் ஏற்பட்டது. நீங்கள் என்னிடம் உலகின் மிக மோசமான விஷயமென்ன என்று கேட்டால்! அது வட்டி என்று நான் கூறுவேன்."

- ஜூப்ளி 2000, நியூஸ் அப்டேட் ஆகஸ்ட் 2000

வட்டி, சகோதர உணர்வு மற்றும் மனிதாபிமானத்திற்கும் எதிரானதாகும். மேலும், அது ஆசை, சுயநலவாதம் மற்றும் கல்நெஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டது.

வட்டி பண வீக்கத்திற்கான ஒரு முக்கிய காரணமாகும்.

வட்டியினால் கூடும் கடன் சுமையின் விளைவு அதிர்ச்சியும் மன அழுத்தத்தை தரும்.

வட்டி என்பது எந்த இழப்பும் இல்லாமல் உறுதியான இலாபமாகும். எனவே, அனைத்து அபாயங்களையும் கடன் வாங்குபவர் மட்டுமே எதிர்கொள்கிறார். இரண்டு தரப்புகளும் அபாயத்தையும் இலாபத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் உள்ளது.

வட்டி சமூகத்தில் ஏகாதிபத்தியத்தை உருவாக்குகிறது. இங்கு பணக்காரர்கள் தங்களின் செல்வத்திற்காக பரிசு பெறுகிறார்கள், ஆனால் ஏழை அதிகம் வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்!

2008 மற்றும் 2009 ஆண்டுகளில் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, டெய்லி வாடிகன் பத்திரிகையான L’Osservatore Romano, கூறியதைக் குறிப்பிடுகையில், இஸ்லாமிய நிதி அமைப்பு நெருக்கடியின் போது மேற்கத்திய வங்கிகளுக்கு ஒரு மாற்றாக உதவக்கூடும். என தெரிவித்தது. வாடிகன் தனது ஆலோசனையில் கூறியது: "இஸ்லாமிய பொருளாதார கொள்கை வங்கி மற்றும் வாடிக்கையாளர்களின் உறவை மேம்படுத்தும். மேலும் உண்மையான பொருளாதார சேவையின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் அடிப்படையில் இருக்கிறது என்று பரிந்துரைத்தது."

வட்டி சார்ந்த வங்கிகள் நஷ்டமடையும் நேரத்தில் இஸ்லாமிய வங்கிகள் அதே போன்ற நஷ்டத்தை அடைவதில்லை. ஏனென்றால், இலாபமும் நஷ்டமும் (கடன் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் ஆகிய) இருதரப்பினராலும் பகிரப்படுகிறது. இதனால் கடன் கொடுப்பவரும் கடனாளி பெற்றதை திரும்ப கொடுத்து விட வேண்டும் என்பதில் கவனத்துடன் இருப்பார்.

வட்டி ஏற்படுத்தும் அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, இஸ்லாம் இத்தகைய வெறுக்கத்தக்க செயலைத் தடை செய்வதில் ஆச்சரியமில்லை.

நான் எவ்வாறு வட்டியை தவிர்ப்பது?

ஒரு ஏகாதிபத்திய நாட்டில் வாழும் நாம், வட்டி எனும் சமூகத் தீமையைத் தவிர்க்க வட்டி சார் வங்கிகளில் கடன் வாங்காமல் இருக்க வேண்டும். இது தவிர்த்து இன்னும் சில அறிவுறுத்தல்கள்: (கீழே தரப்படுகிறது)

வட்டியில்லா வங்கி கணக்கு வைத்துக் கொள்வது.

ஒருவர் நேரம் தவறாமல் கட்டணம் கட்ட கூடியவராக இருந்தாலும் வட்டி அபராதங்களை கொண்டுள்ள ஒப்பந்தங்களை தவிர்த்தல்.

பில் கட்டணங்களை நேரத்தில் கட்டுவது, காலதாமத அபராதங்களை தவிர்த்தல்.

வட்டியை பயன்படுத்தாமல் வர்த்தகத்தைத் தொடரத் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்தல்.

இயன்றால், குடும்பத்தினரிடமிருந்தோ! அல்லது நண்பர்களிடமிருந்தோ! (வட்டியில்லா) கடன் வாங்குதல்.

இஸ்லாமிய வங்கிகளின் தொடர்பில் இருப்பது.

வட்டியில்லாமல் வீடு வாங்க முடியாவிட்டால், வாடகை வீட்டை தேர்வு செய்வது.

மற்றவருக்கு உதவும் நோக்கத்துடன் கொடுக்கப்படும் இடங்களில் வட்டியில்லா அழகிய கடன் வாங்குதல்.

வங்கியின் மூலம் தரப்படும் வட்டியைப் பொறுத்தவரை நாம் பயன்படுத்தவும் வேண்டாம். திருப்பித் தரவும் வேண்டாம். மாற்று ஏற்பாடாக நன்மையை எதிர்பாக்காமல் தர்ம காரியங்களான கடனால் கஷ்டப்படுபவருக்கு உதவி செய்யலாம், இஸ்லாமிய மையங்களுக்கு அல்லது பள்ளிவாசல்களுக்கு கழிப்பறை வசதிகளை செய்து தரலாம்.

வட்டியயைத் தவிர்த்து அனுமதிக்கப்பட்ட செலவுகள் செய்ய ஆகச் சிறந்த வழி, ஒரு நல்ல மார்க்க அறிஞரிடம் அணுகி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படுவதாகும்.

நான் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்தால் என்ன செய்வது?

இஸ்லாத்தில், ஒருவர் உண்மையில் தவிர்க்க முடியாமல் தடுக்கப்பட்ட செயலை செய்தால் அவர் சூழ்நிலை கைதியாகக் கருதி மன்னிக்கப்படுவார். ஆகயால் ஒருவர் வேறு வழியில்லாத நிலையில் பெரும் கஷ்டத்தில் இருந்தால், அல்லது மரணத்தை தவிர்க்க அந்த குறிப்பிட்ட காலம் மட்டும் வட்டி வாங்கினால், அவருக்கு அது தற்காலிகமாக நிலைமையை சமாளிக்கும் பொருட்டு அனுமதி வழங்கப்படுகிறது. அறிந்து கொள்ளுங்கள்! இந்த கஷ்டத்திலும் வட்டியில் ஈடுபடாமல் அல்லாஹ்விற்காக உறுதியாக இருந்தால் அவருக்கு அல்லாஹ்விடம் நற்கூலி உண்டு. ஒருவர் நிர்பந்தத்தில் இருப்பதை பற்றி மார்க்க சட்டதிட்டங்கள் நன்கு அறிந்த ஒருவர் (மார்க்க அறிஞர்) தான் தீர்மானிக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த சலுகை தவறாக பயன்படுத்தப்பட்டு வட்டியில் மக்கள் ஈடுபடுவார்கள். மேலும், அல்லாஹ் விதித்திருக்கும் விபரீதங்களை மக்கள் சந்திக்கக்கூடும்.

வட்டியை பயன்படுத்தி வீட்டை வாங்குவது தொடர்பாக முஸ்லிம்களில் ஒரு பொதுவான தவறான புரிதல் உள்ளது. சிலர், இதை அனுமதிக்கக்கூடிய ஒரு "அவசியம்" எனக் கூறுகிறார்கள். ஆனால், வீட்டை வாங்குவதற்குப் பதிலாக சுலபமாக வாடகைக்கு ஒரு வீட்டைப் பெற முடியும் என்பதனால், இந்தக் கூற்று தவறானது என்பதும் உறுதியாகிறது. எவ்வாறு தண்ணீர் இருக்க மதுவுக்கு அனுமதி கிடையாதோ, அல்லது உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட பிற இறைச்சிகள் இருக்கும் போது பன்றியின் இறைச்சி உட்கொள்ள அனுமதி கிடையாதோ! அதே போன்று வாடகை வீடு என்கின்ற அனுமதிக்கப்பட்ட வழிமுறை இருக்க வட்டியைக் கொண்டு வீட்டைப் பெறுவது, என்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேற்கூறப்பட்ட தவறான கருத்தைக் கொண்டு மக்களை ஏமாற்றி நம்ப வைப்பது எளிது. ஆனால் நினைவில் வைக்க வேண்டியது:

(நம் தூதை) எடுத்துரைப்பதைத் தவிர இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை, இன்னும் நீஙகள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் அல்லாஹ் அறிவான்..05:99

ஒருவர் தனது குடும்பத்தை பராமரிப்பதற்காக செலவழிக்கும் பொருளாதாரம் வீண் கிடையாது. மாறாக அல்லாஹ், செலவு செய்யப்பட்டமைக்கு தர்மத்திற்கான நன்மையை வழங்குகிறான்.

ஒருவர் அல்லாஹ்விடம் கூலியயை எதிர்பார்த்தவராக தனது குடும்பத்தினருக்கு செலவழித்தால் அது அவர் செய்த தர்மம் என்று கணக்கிடபடுகிறது (புஹாரி, முஸ்லிம்).

இம்மை மறுமையின் வெற்றி

வட்டியின் விஷயத்தை பரிசீலிக்கும்போது அல்லாஹ்வின் உதவியில் மட்டுமே உண்மையான வெற்றி இருக்கிறது, நாம் சட்டபூர்வமாக அல்லாஹ் அனுமதித்த (ஹலாலான) வற்றை கடைபிடிப்பதிலும் ஹராமை தவிர்ந்து கொள்வதாலும் நமது சொத்து மற்றும் செல்வதில் இவ்வுலகிலும் மறுமையிலும் அருளும் அபிவிருத்தியும் (ரஹ்மத்தும் பறக்கத்தும்) ஏற்படுத்தும். (அல்லாஹ்) சபித்திருக்கும் வட்டி மூலம் வரக்கூடிய மேலதிக பணத்தினால் என்ன பயன் உள்ளது?

மக்கள் அனைவரும் தங்கள் கல்லறைகளிலிருந்து விரைவாக எழுந்திருப்பார்கள் வட்டியில் சம்மந்தப்பட்டவர்கள் மறுமை நாளில், வலிப்பு நோயாளிகள் போல் எழுந்து நின்று கீழே விழுவார்கள், ஏனென்றால்:

வட்டி உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியம் பிடித்தவன் எழுவது போலல்லாது எழமாட்டார்கள். அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியதேயாகும். உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை (ஹலால்) அனுமதிக்கப்பட்டதாகவும்; வட்டியை (ஹராம்) தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். 2:275

வட்டியை உட்கொள்ளுவோர் இந்த பெரிய பாவத்திலிருந்து மனம் திருந்தி பாவமன்னிப்பு கூறாமல் இருப்பவர்களுக்கும், இது போன்ற தண்டனை தான் கிடைக்கும்.

அல்லாஹ்வின் திருப்தியைப் பெற பாடுபடுபவர்கள் பின்வரும் வசனத்திலிருந்து ஆறுதல் பெறுகிறார்கள்:

நம்பிக்கை கொண்டோரே! அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டியாகவும் இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணாதீர்கள், இன்னும் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், (இதனைத் தவிர்த்துக்கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். 3:130

மறுமையில் எப்படி வெற்றி பெறுவது என்பதும் நமக்குக் எடுத்துரைக்கப்படுகிறது

இறைநம்பிக்கை கொண்டவர்கள், தங்களுக்கிடையிலுள்ள வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அழைக்கப்படும்போது, “நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்!” என்று கூறுவதே, அவர்களின் தன்மையாகும். இவர்கள் தான் வெற்றி பெறக்கூடியவர்கள். 24:51

முடிவுரை

வட்டி என்பது ஹராம், அது பெரும் பாவம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது, மேலும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியாமல் இருப்பது, அவனது தண்டனைக்கு இட்டுச்செல்லும். இவ்வுலக வாழ்க்கை குறுகியது, விரைவானது என்பதை நாம் உணர வேண்டும். மேலும் நமது படைப்பின் நோக்கம் என்பது அழகு மற்றும் செல்வத்தின் மீது ஆசைப்படுவதல்ல, மாறாக அல்லாஹ்வை உளப்பூர்வமாக வணங்கி அவனது விதிகளின்படி வாழ்வதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வட்டி பரவலாகவும் பொதுவானதாகவும் இருப்பதால், அது என்றைக்கும் அனுமதிக்கப்பட்டதாக ஆகாது.

எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ! அவருக்கு (ஒவ்வொரு துன்பத்திலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் எளிதாக்குவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் அவருக்கு வாழ்வாதாரங்களை வழங்குவான், (எனவே ) எவர் அல்லாஹ்வின் மீது (முழுமையாக) நம்பிக்கை வைக்கிறாரோ! அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன், நிச்சயமாக, அல்லாஹ் தன் காரியத்தை அடைந்தே தீருவான், (ஆயினும்) அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை திட்டமாக நிர்ணயம் செய்திருக்கிறான். 65:2,3