Description
உங்களுடைய இரட்சகன் மிக்க விசாலமான அருளுடையவன் 06:147
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அன்பும், கருணையும் தாயின் அன்பைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது.
இறைவன் தனது படைப்புகளின் மீது மேலான அன்பும் கருணையும் கொண்டவன். இந்த உலகத்திலும் மறுமை வாழ்க்கையிலும் நாம் அனுபவிக்கும் அனைத்து அருட்கொடைகளும், அவனது கருணைக்கு தெளிவான சாட்சியாகும்.
அல்லாஹ்வின் பெயர்களில் அவனது அன்பையும் கருணையும் போற்றக்கூடிய சில பெயர்கள் கீழ்வருமாறு:
· பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்
· இரக்கமுள்ளவன்
· அன்பானாவன்
· சகிப்புத்தன்மை கொண்டவன்
· மிக்க அருளாளன்
· மிக்க கருணையாளன்
· நன்மை புரிபவன்
· மிகவும் தாராளமானவன்
· வாரி வழங்குபவன்
அல்லாஹ் மட்டுமே இத்தகைய பெயர்களுக்கு சொந்தக்காரன்.
இந்த பெயர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கருணை, நன்மை மற்றும் அவனது தாராள குணங்களை வர்ணிக்கிறது, அவைகள் அல்லாஹ்வின் முழுமை மற்றும் விசாலமான கருணைக்கு சாட்சியாக இருக்கின்றன. அல்லாஹ் மனிதர்களிடம் பேசும்போது அவனது கருணையை வெளிப்படுத்தும் விதமாக: "ஆதமின் மகனே! நீ பூமியின் அளவிற்கு சமமான பாவங்களுடன் என்னிடம் வந்தாலும், எனக்கு எந்த இணையும் கற்பிக்காமல், என்னைச் சந்தித்தால் நானும் அதைக்காட்டிலும் அதிகமான மன்னிப்பை வழங்குவேன்." என்று கூறுகின்றான்.
அல்லாஹ்வின் கருணை மற்றும் அருள்கொடைகளின் எடுத்துக்காட்டுகள்
ஆகவே, (மனிதன், ஜின் வர்க்கத்தினராகிய) நீங்கள் இரு வ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? 55:13
வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து அல்லாஹ்வின் அருட்கொடைகளான, ஆரோக்கியம், பார்வை, செவிப்புலன், சுத்தமான காற்று, குழந்தைகள், சொத்து இன்னும் பலவற்றை மனிதர்கள் அனுபவிக்கின்றனர். சிலர் அல்லாஹ் அருளிய அறிவைக்கொண்டு இத்தகைய அருட்கொடைகளை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்வின் நோக்கத்தை அறிந்து அல்லாஹ்வின் விருப்பத்திற்கு தங்களை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள். அல்லாஹ்விற்கு மாறுசெய்பவர்கள், அவனது அருள்கொடைகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அதற்கு நன்றி மறக்கின்றனர். அல்லாஹ்வை பகிரங்கமாக நிராகரித்த பின்பும் அவர்களுக்கு வாழ்வை அனுபவிக்கவும், சுகந்திரமாகச் சிந்திக்கவும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. அல்லாஹ்வின் கருணையில்லையென்றால் இவர்கள் மனிதர்களாகவே படைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.
அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்கும், அவனது அருட்கொடைகளை அடையாளம் கண்டு, அவனது கட்டளைக்கிணங்க பயன்படுத்துவதற்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் (அல்லாஹ் கூறுகின்றான்) "அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால்! அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. நிச்சயமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.16:18
வேதங்கள் மற்றும் நபிமார்கள் மூலம் வழிகாட்டுதல்
(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உம்மீது இறக்கிவைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கிவைத்தான். 3:3
படைப்பின் தொடக்கத்திலிருந்தே, மனிதன் வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ள தனியாக விடப்படவில்லை. அல்லாஹ்வின் கருணையின் காரணமாக, மனிதர்கள் நபிமார்களின் மூலம் தூதுச் செய்தியின் வழிகாட்டலை பெற்றார்கள். அவர்கள் தங்கள் சமூக மக்களுக்கு வழிகாட்டவும், பாதுகாக்கவும் வேத கட்டளைகளை கற்பித்தனர். (அதனடிப்படையில் நமக்கு அல்லாஹ் வழங்கிய வேதம் குர்ஆனாகும்) வேதங்களில் மிகவும் பரிபூரணமானதும் கண்ணியமிக்கதும் அல்-குர்ஆன் ஆகும். மற்றும் தூதர்களில் இறுதியானவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.
குர்ஆன், மனிதர்களுக்கு இறுதியாக வழிகாட்ட வந்த வேதமாகும். முந்தைய வேதங்களை குர்ஆன் ரத்து செய்து விட்டது. இது மனிதர்களுக்கு வந்த இறுதி வழிகாட்டுதலாகும். முந்தைய காலங்களில் இறைவன் நபிமார்களை அனுப்பியது போலவே, அன்றாட வாழ்க்கையில் குர்ஆன், கற்றுத் தரும் கருணை மற்றும் நீதி சார்ந்த போதனைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்த பரிபூரணத்தன்மையுள்ள ஒரு நல்ல முன்மாதிரியை தூதராக அல்லாஹ் மக்களுக்கு அனுப்பினான். அந்த நல்ல முன்மாதிரி இறுதி நபியான முஹம்மது நபி (ஸல்) அவர்களே! – அந்த தூதர் மனித குலம் முழுமைக்கும் அருட்கொடையாக வந்தவர்.
(நபியே!) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். 21:107
நபி (ஸல்) அவர்களின் கருணை, சகிப்புத்தன்மை போன்ற அழகான போதனைகளைக் குறிக்கும் சில நபிமொழிகள் பின்வருமாறு:
மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.
இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!”
தனது அண்டை வீட்டார் பசித்திருக்கையில் தான் (மட்டும்) வயிறார உண்பவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் அல்ல.
மனிதர்கள் மீது இரக்கம் காட்டாதவருக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.
சமூகத்திற்கு, இந்த காலகட்டங்களில், இத்தகைய அழகான அறிவுரைகள் நமக்கு எவ்வளவு அவசியமாக இருக்கின்றது?
படைப்பினங்களின் மீது அல்லாஹ்வின் கருணை
மனிதர்களின் படைப்பும், அவர்களின் அனைத்து தன்மைகளும் இறைவனின் மிகப்பெரிய கருணையாகும். நாம் படுக்கையிலிருந்து எழுந்து, உண்டு களித்து, அன்றாட பணிகளையும் கடமைகளையும் செய்து, நிம்மதியாக தூங்கும் தன்மை கொண்டிருப்பதே! இறைவனிடம் நம்மை நன்றியுணர்வுடன் இருக்கச்செய்ய வேண்டும்.
இன்னும், தன் அருளால் இரவையும், பகலையும் உங்களுக்கு அவனே ஆக்கினான் (இரவை) அதில் நீங்கள் இளைப்பாறுவதற்கும், பகலை நீங்கள் (அவனுடைய அருளைத் தேடிக் கொள்வதற்கும், இன்னும் நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் (அவ்வாறு ஆக்கியுள்ளான்). 28:73
மனைவி என்பது இறைவனின் மிகப்பெரிய கருணைகளில் ஒன்றாகும்; அமைதியையும் அன்பையும் பரிமாறிக்கொள்வதற்கான உறவாகும்.
(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. 30: 21
மற்றொரு கருணை என்னவெனில், அல்லாஹ் நம்மை பாவமற்றவர்களாகப் படைத்தான். மேலும், நமக்கு தகுந்த வயதும் அறிவும் வந்த பிறகே, அவன் நம்முடைய நன்மை தீமை செயலுக்கு கணக்கு கேட்பான். ஆனால் இந்த கொள்கை கிறிஸ்தவத்தில் நேர் முரணானதாகும். அங்கு "மனிதர்கள் பிறந்தபோதே பாவம் செய்தவர்கள்" என்று (கிறிஸ்தவத்தில்) கருதுகிறார்கள்.
பாவ மன்னிப்பு, அல்லாஹ்வின் கருணையின் மற்றொரு முக்கிய உதாரணமாகும், ஏனெனில் மனிதர்கள் பரிபூரணமானவர்கள் அல்ல, அறிந்தோ! அறியாமலோ! தவறுகளை செய்பவர்கள். என்பதை அல்லாஹ் அறிந்துள்ளான். மனிதர்கள் பாவங்களைச் செய்வது, அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கையை இழக்க வேண்டும் என்பதற்கோ! அல்லது நாம் தோல்வியடைவதற்கோ! அல்ல! மாறாக, அவன் மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதில் தாராளமிக்கவன் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்காக.
"தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) வரம்புமீறிவிட்ட என் அடியார்களே! அல்லாஹ்வுடைய அருளைவிட்டும் நீங்கள் நம்பிக்கை இழக்கவேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவற்றையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக! 39:53
அல்லாஹ்வின் கருணையிலிருந்து மிருகங்களும் விதி விலக்கில்லை. அவற்றிற்கு கேட்கும் திறனும் பார்வை திறனும் வழங்கப்பட்டுள்ளன; உணவு, சந்ததிகள், மற்றும் பல அருட்கொடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் கருணை அவற்றையும் அரவணைக்கிறது. அவன் கருணையின் ஒரு சிறு பகுதி பூமியில் இருக்கவே தான், “அவனது படைப்புகள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்கிறார்கள். இதற்கு உதாரணம் என்னவெனில், ஒரு குதிரை தனது கன்று குட்டியை (கூட்டத்தில் எங்கிருந்தாலும் கண்டு) பாதுகாத்துக்கொள்ளும். இவ்வாறு தான் மீன்கள் கடலின் ஆழங்களில் இருந்தாலும், பூமியில் உள்ள பூச்சிகளோ அல்லது வானில் பறக்கும் பறவைகளோ இருந்தாலும், ஒவ்வொரு உயிரினத்தையும் தன் கருணையைக் கொண்டு கவனித்துக்கொள்கிறான்; அவனே அனைத்து படைப்புகளையும் பராமரிக்கின்றான்.
அல்லாஹ்வின் கருணையை நம் மீது அதிகரிக்க செய்வது எப்படி?
நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக்க சமீபத்திலிருக்கிறது. 7:56
அல்லாஹ்வின் கருணையின் காரணமாக, பின்வரும் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சரியான வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களை மன்னிப்பதாகவும் அவன் உறுதியளித்துள்ளான்:
ஆயினும், யார் பாவமன்னிப்பை தேடி, நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பிறகு நேர்மையாகவும் வாழ்கின்றானோ, அவனை நிச்சயமாக, நான் பெரிதும் மன்னிக்கக்கூடியவனாய் இருக்கின்றேன்.20:82
இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை நம்புவதும் கீழ்ப்படிவதும் சரியான நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.
சுருக்கமாகச் சொன்னால், அல்லாஹ்வின் கருணையை அதிகமாகப் பெறுபவர்கள், (யாரெனில்) அவனுடைய அருட்கொடைகளையும் அருளையும் உணர்ந்தவர்கள்; அவற்றை அல்லாஹ் திருப்திபடும் வகையில் பயன்படுத்தியவர்கள். அல்லாஹ் கொடுத்த செல்வத்தை தர்மத்திலும், தேவையுடையவர்களைக் கவனிப்பதிலும் செலவு செய்தவர்கள்; அனாதைகளை பராமரிக்க உதவி செய்தவர்கள்; நல்லதே பேசியவர்கள், மற்றும் அல்லாஹ் ஏவிய மற்ற நற்செயல்களைச் செய்தவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களிடம் கருணை காட்டுபவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவான். பூமியில் இருப்பவர்களிடம் கருணை காட்டுங்கள் - வானின் மீது இருப்பவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்.
கீழே, அல்லாஹ்வின் கருணையை அடைய சில வழிகள் உள்ளன
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம்.. 03:132
(மனிதர்களே) இதுவும் வேத நூலாகும், இதனை நாம் இறக்கி வைத்துள்ளோம், (இதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக) பரக்கத்துச் செய்யப்பட்டதாகும், ஆகவே, இதனை நீங்கள் பின்பற்றுங்கள், மேலும், நீங்கள் (அல்லாஹ்வினால்) அருள் செய்யப்படுவதற்காக (அவனுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள்.06:155
இன்னும், (நம்பிக்கை கொண்டவர்களே!) தொழுகையை (முறையாக) நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள், மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள், (அவற்றின் மூலம்) நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்.24:56
(அறிவுடைய அவர்கள்) “எங்கள் இரட்சகனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டிய பின்னர், எங்களுடைய இதயங்களை (அதிலிருந்து) சறுகிவிடுமாறு செய்து விடாதிருப்பாயாக! மேலும், உன் புறத்திலிருந்து அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாவாய். 3:8
கருணை மற்றும் பொறுப்பு
அல்லாஹ்வின் கருணைத் தன்மைக்கு இணையாக, அவனது நீதியின் தன்மையும் உள்ளது. அல்லாஹ் மிக்க கருணையாளன்.
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்குத் தங்கள் இரட்சகனிடத்தில் அருட்கொடைகளுடைய சுவனங்களுண்டு. முஸ்லிம்களை, குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? (சத்தியத்தை நிராகரிப்போரே!) உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் சொல்கிறீர்கள்? 68:34 - 36
இருப்பினும், அவன் கணக்கீடு செய்வதில் வேகமானவன் . நேர்மையான மனந்திருந்தலின்றி அல்லது மீண்டும் ஒருபோதும் பாவத்திற்குச் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இல்லாமல் ஒரே பாவங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அல்லாஹ்வை ஏமாற்றி அவனுடைய கருணையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க முடியாது.
எவர்கள் தீய செயல்கள் புரிந்தவாறு இருந்து மரணம் நெருங்கும்போது ‘நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்’ என்று கூறுகின்றார்களோ அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது. மேலும் இறுதி மூச்சுவரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். 04:18
முஸ்லிம்கள் அவர்கள் செய்யக்கூடிய பாவங்களைப் பற்றி கவலைப்படும் அதே வேளையில், நல்ல செயல்களுக்கு வெகுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்கள் பாவங்களைச் செய்யும்போது, மனந்திரும்பி, மன்னிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இறுதியாக, அவர்கள் இறைவனின் வார்த்தைகளில் அமைதியையும் நிம்மதியையும் பெறுகின்றனர், அவற்றை தங்கள் இதயத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.22:65
